வருவாய் ஈட்ட இயலாத முன்னாள் கணவருக்கு மாதம் ரூ.10,000 பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வங்கியில் வேலைபார்க்கும் பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
அந்த வழக்கு விசாரணையின் போது, அந்த பெண்ணின் கணவர், தனது உடல்நிலை வருவாய் ஈட்டும் நிலையில் இல்லாததால், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து நிவாரணமாக மாதாந்திர பராமரிப்பு தொகை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வங்கி பெண் ஊழியர், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டு மனுவில், ”வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், தங்களின் குழந்தையை பராமரிப்பதற்கும் ஏற்கெனவே பொறுப்புகள் இருந்ததால், பராமரிப்பு தொகையை செலுத்த இயலவில்லை.
குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். எனவே, வருமான ஆதாரம் இல்லாததால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக்கின் ஒற்றை நீதிபதி அமர்வு முன்பு கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24-ன் விதிகள் ‘துணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.
இது தன்னைத் தானே பராமரிக்க முடியாத கணவன் அல்லது மனைவியை உள்ளடக்கியது. வேலையில்லாத போது தன்னையும், தனது குழந்தையின் செலவுகளையும் மனுதாரர் எவ்வாறு கவனிக்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
மேலும், வேலையில்லாததற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. கணவர் தன்னைப் பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில், வருமான ஆதாரத்தைக் கொண்ட மனைவி, இடைக்கால பராமரிப்பு தொகையை செலுத்த வேண்டியது கட்டாயம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.