பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்தியக் குழுவின் திட்டத் தலைவர் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாகக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வன ஒலிம்பிக் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவின் தலைவராக முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பாரிஸ் ஒலிம்பிக்குக்குச் செல்லும் இந்திய வீரர்கள் குழுவுக்கான தலைவர் பொறுப்பிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பிடி உஷா, பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மேரி கோம் கடிதம் மூலம் கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில், “நாட்டுக்காக அனைத்து வகையிலும் சேவை செய்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த வகையில் இந்த பொறுப்பில் செயல்பட நான் தயாராகவும் இருந்தேன். இருந்தாலும், இந்த பொறுப்பில் என்னால் தொடர முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடி உஷா, “லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார் மேரி கோம். இந்த பொறுப்பிலிருந்து பின் வாங்குவது சங்கடமாக இருக்கிறது. ஆனால், எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களுக்கு உற்சாகம் கொடுப்பேன். அவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தனிப்பட்ட காரணங்களுக்காக மேரி கோம் இந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அது வருத்தம் தருகிறது. விரைவில் அந்த பொறுப்பில் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார். மேரி கோமின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அவருக்கு எனது ஆதரவு உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளேன். அவரது முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டுகிறேன்” என பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இது வரை 40-க்கும் அதிகமான இந்திய வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.