எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 1930 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவரின் தந்தை ஒரு நாட்டுப் புறக் கவிஞர்.
பல கலைஞர்களைப் போலவே வறுமை இவரையும் விட்டு வைக்கவில்லை. வறுமையின் காரணமாக, கிடைக்கும் தொழிலை செய்து வந்த கல்யாணசுந்தரம் தன் நண்பர்களுடன் விவசாயச் சங்கத்தைத் தஞ்சையில் கட்டியெழுப்பினார்.
கலை மீது கொண்டிருந்த அவரது ஆர்வம் அவரை சென்னைக்கு வரவைத்தது. இவர் தன் கவிதைகள் மூலம் நூற்றாண்டுகளைக் கடந்த பகுத்தறிவு, சமத்துவக் கருத்துகளை விதைத்தவர்
சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்த இவரின் பாடல்களில் கிராமிய மணம் வீசியது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டு வந்தது.
இவர் 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டு தான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.
இவர் ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். 1959 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன.
இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ இவரின் ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.
இவர் எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். அதேபோல் இவர் பாடல் பாடுவதிலும் வல்லவர்.
பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. அதேபோல் மக்கள் கவிஞர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இவரது நினைவைப் போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.