சுதந்திரத்திற்காக, ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரையும் ஈவு இரக்கமின்றி, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால், கொன்று குவிக்கப்பட்ட, பாரதத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, படுகொலை சம்பவம் நடந்தேறிய நாள் இன்று.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், வைசாகி விழாவைக் கொண்டாட இந்திய மக்கள் கூடியிருந்தனர்.
அந்த சமயத்தில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹேரி டையர் உத்தரவின்பேரில், ஜாலியன்வாலாபாக்கில் வைசாகி விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி ஏந்திய 50 ராணுவத்தினர் சுடத்தொடங்கினர்.
ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தனர். ஜாலியன்வாலாபாக் பூங்காவில் வெளியேறும் பாதை மிகவும் குறுகியதாக இருந்ததன் காரணமாக நெரிசலில் பலர் சிக்கி இறந்தனர்.
அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கி தோட்டாக்களால் இறந்தனர். இந்த சம்பவம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியது.
அன்று ஆங்கிலேயர்களின் துப்பாக்கியில் இருந்து 10 நிமிடங்களில் மொத்தம் 1650 தோட்ட்டக்கள் பறந்தன. அந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும், 1,100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் வீரமரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. துணை கமிஷனர் அலுவலகத்தில் 484 தியாகிகளின் பட்டியல் உள்ளது. ஜாலியன்வாலாபாக்கில் 388 தியாகிகளின் பட்டியல் உள்ளது.