உலகில் வேறு எங்கும் பார்க்காத அளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட்டை திருவிழாபோல் கொண்டாடுவதாக ஜேக் பிரேசர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் 26-வது போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடியது.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18வது ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 22 வயது அவுஸ்திரேலிய வீரரான ஜேக் பிரேசர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இப்போட்டியில் இவர் 35 பந்தில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்களை எடுத்தார்.
இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய அவர், உலகில் வேறு எங்கும் பார்க்காத அளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட்டை திருவிழாபோல் கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “கடந்த 5 – 6 போட்டிகளில் ஓரங்கட்டப்பட்ட எனக்கு புதிய பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த போட்டியில் பேட்டை அதிகமாக சுற்றாமல் பந்தை நடுப்பகுதியில் கண்டுபிடித்து அடித்தேன்.
கடந்த 12 மாதங்களாக அதை செய்ய முயற்சித்து வருகிறேன். கவர்ஸ் திசைக்கு மேலே அடித்த ஷாட் எனக்கு பிடித்தது. ஆப் சைடுக்கு மேலே அடிப்பதை விட சிறந்த ஷாட் எதுவுமில்லை. பவர் பிளேவுக்கு வெளியே பேட்டிங் செய்ய தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர், ” இந்தியாவில் இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இந்த நாடு வித்தியாசமானதாக இருக்கிறது. இதைப்போல் எங்கும் பார்த்ததில்லை. இதற்கு முன் கேள்விப்பட்ட நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். இன்னும் 8 வாரங்கள் இங்கே இருக்கப்போவது சிறப்பானதாகும்” என்று கூறினார்.