சித்திரை மாதத்தின் முதல் நாளில் தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது . கேரளாவில் இந்நாளை விஷு என்று கொண்டாடுகிறார்கள் .
விஷு கனி காணும் நன்னாளாக கொண்டாடப் படும் இந்த நாளில் , ஒரு தாம்பாளத்தில், மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை, ஆப்பிள், ஆரஞ்சு முதலான பழங்களை வரிசையாக வைப்பார்கள்.
பாக்கு, பழம், வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம், பணம் இன்னொரு தாம்பளத்தில் அரிசி, கல் உப்பு, பருப்பு,மஞ்சள், வெல்லம் என ஒற்றைப் படையில் 5 பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்
அதில் சில்லறைக்காசுகள், பூ, மற்றும் தங்க நகைகளை அடுக்கி வைப்பார்கள். முதல்நாளே, வீட்டுப் பூஜையறையை சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரித்து, பழங்களும் காசுகளும் கண்ணாடியும் பூக்களும் ,தங்க நகைகளும் கொண்ட தாம்பாளத்தை பூஜையறையில் கோலமிட்ட பலகையின் மீது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி முன் இரு புறமும் குத்து விளக்கேற்றி வைத்துவிடுவார்கள்.
புத்தாண்டு அன்று அதிகாலை கண்விழித்ததும் பூஜை அறையில் வைத்த கண்ணாடியில் தன் முகம் பார்த்து விட்ட ,தாம்பாளத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பழங்களையும் பணத்தையும் கண்ணாடியையும் ,தங்க நகைகளையும் கண்டு தரிசனம் செய்வார்கள்
சித்திரை விஷூ நன்னாளில், இப்படி கண்விழித்துப் பார்ப்பதால், கனிகளைப் போல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நம் முகத்தை நாமே கண்ணாடியில் பார்ப்பதால், நம்மைச் சுற்றியுள்ள திருஷ்டி அனைத்தும் விலகிவிடும்.
தங்கம் மற்றும் காசுகளைப் பார்ப்பதால், சகல ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் தங்கும் என்பது ஐதீகம். ஒருகாலத்தில் கேரளாவில் மட்டுமே இருந்து வந்த இந்த சம்பிரதாயம் இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது தமிழ்ப் புத்தாண்டு நாளில் கனி காணுதல் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பது சாஸ்திரம் .
கை நீட்டம் என்றும் இந்த கனி காணுதலை சொல்லுவார்கள் . அதேபோல புத்தாண்டு அன்று மதிய உணவில் வெல்லம் மாங்காய் -வேப்பம்பூ பச்சடி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள்.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள், சிறுவர், சிறுமிகள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள்.
அப்போது பெரியவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பேரன் பேத்திகளுக்கும், உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் போன்றவருக்கு வசதிக்கேற்ப தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், காய்கறிகள் கொன்றை பூ மலர்கள் அரிசி உள்ளிட்டவற்றை கைநீட்டமாக வழங்குவார்கள்.
ஒருவருக்கொருவர் காசு பணங்களை பரிமாறிக் கொள்ளும் பழக்கமாகவும் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதே இதன் சிறப்பாகும். இப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் மங்கலம் பொங்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும்.