சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, இந்திய இராணுவம் பதிலடி கொடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “இரண்டு நாடுகளும் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில், ஒருபோதும் துருப்புக்களை வைத்திருக்கவில்லை. இரு படைகளும் அங்கு இருந்து விலகி தங்கள் பகுதிகளில் நிறுத்தியுள்ளன.
2020-ஆம் ஆண்டில், சீனா சில இடங்களில் தனது படைகளை முன்னோக்கி கொண்டு வந்தது. பதிலுக்கு, நாங்களும் படைகளை முன்னெடுத்து சென்றோம். இதனால், சீனாவுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. பின்னர், இரு படைகளும் மேலாதிக்கத்திற்காக தொடர்ந்து செயல்படுகின்றன. ஆனால், எந்த அத்துமீறலும் இல்லை.
நம்முடைய எந்த நிலத்தையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது. ஆனால், இந்திய ராணுவமும் அதற்கு அதே வழியில் பதிலடி கொடுத்தது” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.