நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தில் ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அதாவது இந்த வாக்காளர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். அதிலும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இந்த இளம் வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக பெற வேண்டும் என்பதில் பல்வேறு கட்சிகள் இடையே தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளும் இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை கையில் எடுத்துள்ளன.
ஒரு கோடி இளம் வாக்காளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சமூக வலைதள பக்கங்களில் இந்த கட்சிகளும் பதிவுகளை தினமும் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதன் பின்னணியில் இளம் வாக்காளர்களை கவருவதற்கான வியூகம் இருப்பதாக தகவல் வெளியானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கோவை இளைஞர்களுக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருப்பதால் நவீன கிரிக்கெட் மைதானம் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். அந்த பதிவை கண்ட சில மணி நேரத்துக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தி.மு.க.வில் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் பதிவிடும் ஒவ்வொரு தகவலும் திராவிட சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் வகையில் உள்ளன. இப்படி ஏதேதோ செய்து இளைஞர்களை தன்வசப்படுத்தப் பாடுபடுகிறது திமுக.
ஆனால் இதற்கு முன்னதாக கொடுத்த வாக்குறுதியே இன்னும் செய்து முடிக்கவில்லை. அதேபோல் தற்போது கிரிக்கெட் மைதானம் கட்டி தருகிறோம் என்று திமுக கூறியதற்கு, கால்பந்து விளையாட்டு பிரியர்கள் முதலில் ஒரு கால்பந்து மைதானத்தை சரியாக கட்டிக்கொடுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர், தேர்தல் நெருங்கி வருவதாலும், ஐபிஎல் போட்டி நடைபெறுவதாலும் கிரிக்கெட் ரசிகர்களின் ஓட்டுக்காக இப்படி கூறுவதாக விமர்சித்து வருகின்றனர்.