ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 68 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராதிகா வெள்ளி பதக்கம் வென்றார். 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஷிவானி வெண்கல பதக்கம் வென்றார்.
கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான 68 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவை சேர்ந்த ராதிகா பங்குபெற்றார். இவருடன் கிர்கிஸ்தானை சேர்ந்த குல்னுரா தஷ்டன்பிகோவா மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ராதிகா 2-0 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனையான குல்னுரா தஷ்டன்பிகோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனை ராதிகா, ஜப்பான் நாட்டை சேர்ந்த நோனோகா ஒசாகியை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா 2-15 என தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்திய வீரநகை ராதிகா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக கடத்த ஆண்டு நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ராதிகா வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்களுக்கான 50 கிலோ பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை ஷிவானி பவார், ஜப்பான் வீராங்கனை ஜிகி பெங்கிடம் தோல்வியடைந்தார்.
இதில் சீன வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு ஷிவானி தகுதி பெற்றார்.
இதில் இந்திய வீராங்கனை ஷிவானியுடன் மங்கோலியாவை சேர்ந்த டோல்கோர்ஜாவி போட்டியிட்டார். இதன் முடிவில் இந்திய வீராங்கனை 9-7 என மங்கோலியாவின் டோல்கோர்ஜாவினை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார்.