திருச்சூர் பூரம் திருவிழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவின் போது, யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு நிபந்தனைகளை மாநில வனத்துறை விதித்துள்ளதற்கு, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சூரில் உள்ள வடக்குநாதன் சிவன் கோவிலில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பூரம் திருவிழா வரும் 19 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த விழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதில், “யானைகளின் அணிவகுப்பு நடக்கும் இடத்தில் இருந்து 50 மீ., சுற்றளவில் மேளதாள வாத்தியங்கள், பட்டாசுகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் யானைகளை 10 அடி துாரத்தில் நின்று ரசிக்கலாம். யானைப்பாகனை தவிர வேறு யாரும் யானைகளை தொடவோ, பராமரிக்கவோ அனுமதி இல்லை.
யானைகளுடன் வரும் யானைப்பாகன்கள், மதுபானம், போதைப் பொருள் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த, போலீசாரால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடப்பவர்கள், விழாவில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவர்” என்று கூறப்பட்டது.
இந்நிலையில், வனத்துறையின் சுற்றறிக்கைக்கு கோவில் நிர்வாகத்தினர், விழாக்கமிட்டி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தேவசம் போர்டின் மூத்த உறுப்பினர் ஒருவர், ”வனத்துறையினரின் இந்த சுற்றறிக்கை நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்றாகும்.
திருவிழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார், வனத்துறை உள்ளிட்டோர் ஏற்கனவே பேச்சு நடத்தி, விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் சூழலில், வனத்துறையின் இந்த அறிவிப்பு பூரம் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.