பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு பாந்த்ராவில் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அவரது வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நான்கு ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் குழுவும் சம்பவ இடத்துக்கு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், சல்மானை மிரட்டி மின்னஞ்சல் வந்தது. அதனைத் தொடர்ந்து மும்பை போலீஸார் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.