திமுக ஓட்டுக்காக பணத்தை வாரி கொடுத்தாலும் மக்கள் பாஜகவினருக்கு தான் வாக்களிப்பார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பல்லடம் சட்டமன்றத் தொகுதி கரைப்புதூர் உள்ளிட்ட 28 பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் பாஜக தேர்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றவிட்டதாகவும் கூறினார்.
தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கோவை தொகுதியில் கொட்டினாலும், இரவு நேரத்தில் திமுகவினர் கரண்டை ஆப் செய்துவிட்டு பணப்பட்டுவாடா செய்தாலும், தாய்மார்கள் அன்புத்தம்பி அண்ணாமலைக்கு தான் வாக்களிப்பார்கள் என எனக்கு தெரியும் என கூறினார்.
உங்களுக்காக நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது என் பக்கம் தான் நீங்கள் நிற்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. திமுக ஆட்சிக்கு வந்த 39 மாதங்களாக சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தாமரை சின்னத்தில் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.