நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கான ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் ‘பூத் சிலிப்’ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் சார்பில், அனைத்து வாக்காளர்களுக்கும், ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளது.
இப்பணியை கடந்த 13 ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று பூத் சிலிப்புகளை வழங்கினர்.
நேற்று முன்தினம் நிலவரப்படி, 92.82 சதவீதம் பேருக்கு பூத் சிலிப்கள் வழங்கப்பட்டிருந்தன. சில வீடுகளுக்கு சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை என ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள், ‘Voter Helpline’ எனும் மொபைல் போன் செயலி மற்றும் தேர்தல் கமிஷன் இணையதளத்தில், தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது தங்கள் பெயர் மற்றும் விபரங்களை குறிப்பிட்டு, ‘பூத் சிலிப்’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.