சங்கராபுரம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக ஜாதி சான்று, வழங்கப்படாததால் கணிக்கர் சமுதாய மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாக வீட்டில் கருப்பு கொடி கட்டியும் சுவரொட்டிகள் ஒட்டியும் புறக்கணித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில் துறைப்பட்டு பகுதியில் கணிக்கர் வகுப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் கணிக்கர் மக்களின் குழந்தைகள் தற்போது மூங்கில் துறைப்பட்டு, பொரசப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அரசு சலுகைகள் பெற முடியவில்லை எனவும் இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலை பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வீட்டில் கருப்பு கொடியேற்றியும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.