தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் தேர்தல் மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக இன்றளவும் குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனக்கூறிய பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். பிறகு அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சிலர் வாக்களித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட பகுதியில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க செல்லவில்லை.
கடலூர் மாவட்டம், கச்சிபெருமாநத்தம் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்தனர். மொத்தம் 921 வாக்காளர்கள் உள்ள இப்பகுதியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்ன அய்யன்குளம் பகுதியில் கழிவறை, சாலைகள், உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதரக்கூறி பலமுறை தெரிவித்தும், இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் , சவேரியார்பட்டினம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த முயற்சியில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மொத்தமாக ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டு பகுதி மக்கள் நீண்ட நாட்களாக மருத்துவ கழிவு தொழிற்சாலையை அகற்ற கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வாக்களிக்க செல்லவில்லை.