இந்திய போக்குவரத்து துறையில் புதிய புரட்சியாக விரைவில் ஏர்டாக்சி அறிமுகமாக உள்ளது. எப்போது அறிமுகமாக உள்ளது? எப்படி பயணிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்!
இந்தியப் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும் சூழலில் இதற்கு தீர்வாக மின்சாரத்தில் இயக்கும் விமானங்களான எலட்ரிக் ஏர் டாக்சி வர இருக்கிறது.
மிக வேகமாக அனைத்து துறைகளுக்கும் முன்னேறிவரும் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஏர் டாக்சிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் , இந்தியாவின் இண்டிகோ நிறுவனத்தின் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
டெல்லியின் கனாட் பிளேஸ் என்ற இடத்திலிருந்து ஹரியானாவின் குருகிராமுக்கு சாலை வழியாக பயணித்தால் ஏறத்தாழ ஒன்றைரை மணி நேரம் ஆகும். ola, uber போன்ற கால் டாக்ஸியில் பயணிக்க 500லிருந்து 600 ரூபாய் வரை ஆகும் . அதுவே மெட்ரோ இரயிலில் 50 ரூபாய் கட்டணம் ஆகிறது. ஆனால் அதுவே ஏர் டாக்ஸியில் வான் வழி பயணித்தால் 7 நிமிடங்களே ஆகும்.
எனவே நான்கு பேர் பயணம் செய்யக் கூடிய இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சேவை இந்த இரு பகுதிகளுக்கும் இடையே தொடங்க இருக்கிறது. 240 கிலோ மீட்டர் வேகத்தில், 160 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்சிகளில் பயணக் கட்டணம் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
நகரங்களைப் பொறுத்தவரை இந்த ஏர் டாக்ஸி பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல் சரக்குகள் ஏற்றிச் செல்லவும், மருத்துவம் மற்றும் அவசர சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஏர் டாக்சிகள் 200 விமானங்களுடன், முதலில் இந்தியாவின் தேசியத் தலைநகரான டெல்லியில் தொடங்கப்பட்டு , படிப்படியாக மும்பை, பெங்களூர், என நாடு முழுவதும் சேவையைத் தொடர இருப்பதாக தெரிய வருகிறது.
எலக்ட்ரிக் ஏர் டாக்சி இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றே சொல்லலாம்….