இந்திய இரயில்களின் ஓடும் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை மிச்சப் படுத்தும் வகையில் அதிவேக புல்லட் ரயில்களை தயாரிக்கும் பணியில் இந்தியா புதிய சாதனை படைக்கிறது . அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு!
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்தியாவின் அதிவேக புல்லட் ரயில் திட்டம் 2017 ஆம் தொடங்கப்பட்டது . 2026 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் கட்டுமானம் முழு வீச்சில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் புல்லட் ரயில் கனவை நிறைவேற்ற தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் அதிவேகமாக அயராது உழைத்து வருகிறது.
மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் இரயில் வழித்தடத்தில் அதிவேக புல்லட் இரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் 508 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 57 நிமிடங்களில் கடக்கும். மும்பை-அகமதாபாத் இடையே 12 நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்த இரயில் பாதையில், ஒரு நாளைக்கு 35 ரயில்கள் எதிர் எதிர் திசையில் ஓடும்.
பயணிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் முக்கிய நேரங்களில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இந்த அதிவேக புல்லட் இரயில்கள் இயக்கப்படும்.
1 லட்சத்து 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் , மேலும் 459 கிலோ மீட்டர் டெல்லி-அமிர்தசரஸ் 760 கிலோமீட்டர் ஹவுரா-வாரணாசி-பாட்னா
813 கிலோமீட்டர் டெல்லி-ஆக்ரா-லக்னோ-வாரணாசி
878 கிலோமீட்டர் டெல்லி-ஜெய்ப்பூர்-உதைபூர்-அகமதாபாத்
765 கிலோமீட்டர் மும்பை-நாசிக்-நாக்பூர்
671 கிலோமீட்டர் மும்பை-ஹைதராபாத் வழித்தடங்கள் வர இருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் 31000 கிலோமீட்டர் இரயில்வே வழித்தடங்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 5000 கிலோமீட்டர் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்கு, தெற்கு,மற்றும் கிழக்கு பகுதிகளில் , நாடு முழுவதும் மொத்தம் 10 வழித்தடங்களுடனும், மேலும் 3 புதிய வழித்தடங்களிலும் புல்லட் இரயில் திட்டம் நிறைவேற்றப் படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் இந்தியாவின் முயற்சியில். புல்லட் ரயில் திட்டம் புதிய மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.