ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு விமானத் தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. இதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் என்ன தான் நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு!
இஸ்ரேலும், ஈரானும் பல ஆண்டுகளாகவே நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. அதாவது பொறுப்பை ஒப்புக்கொள்ளாமல் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்திவந்தன. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் தென்பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினர், 20 நிமிடங்களில் 5000 ஏவுகணைகள் செலுத்தி திடீர் தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு இஸ்ரேல் இராணுவத்தினர் காசா பகுதியில் கடும் தாக்குதலை மேற்கொண்டது. இஸ்ரேலுக்கு எதிராகவும்.ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாகவும், ஈரான், லெபனான், சிரியா ஏமன் போன்ற நாடுகள் களத்தில் நிற்கும் நிலையில். ஈரானிடம் உதவிபெறும் ஹிஸ்புல்லா அமைப்பினர், மற்றும் ஹவுதி தீவிரவாத அமைப்பினரும் இஸ்ரேலுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளன.
ஏப்ரல் 1 ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது . இதில் ஈரான் ராணுவ அதிகாரிகள், பலர் பலியாகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது . எனினும், இந்த ஏவுகணைகளை இடைமறித்து இஸ்ரேல் அழித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது . இந்த தாக்குதலில் போது, பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும், பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை என்றும், ஈரானில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இஸ்ரேல் இதுவரை இந்த தாக்குதல் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பதற்றத்தை குறைக்க வேண்டும் என்று உலக நாடுகள் அழைப்பு விடுத்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இத்தாலியில் நடைபெற்ற ஜி7 (G7) பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், அமெரிக்கா எந்த வகையிலும் இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை” என்று மட்டுமே கூறிவிட்டு சென்றார்.
இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி கூறும்போது, ஜி7 வெளியுறவு அமைச்சர்களுக்கு ஈரான் மீதான தாக்குதல் குறித்து “கடைசி நிமிட” தகவல்களை அமெரிக்கா வழங்கியது என்று தெரிவித்தார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பெயர் வெளியிடாமல் அமெரிக்க அதிகாரிகள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
தற்காத்துகொள்ள இஸ்ரேல் தன் சொந்த முடிவை எடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்ததைத் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ராஜதந்திர உறவுகளின் மூலம் வன்முறை மற்றும் தாக்குதலில் இருந்து உடனடியாகப் பின்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, மிகவும் புத்திசாலிதனமாக , இந்த விவகாரத்தை கையாண்டு வருகிறது.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும் , இது மூன்றாவது உலகப் போராக மாறிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.