சுட்டெரிக்கும் வெயில் ஒருபக்கம் அதிக வெப்பத்தை வீசுகின்ற நேரத்தில் கேரளாவில் பறவைக் காய்ச்சல் என்ற செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து இறந்தன. அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது அவை இறந்து போனதற்கு காரணம் எச்5என்1 பறவை காய்ச்சல் என்று கண்டறியப் பட்டது.
இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நோய் தொற்று உள்ள கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், அதனுடைய இறைச்சிகள் மற்றும் முட்டைகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன . பறவைக் காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று நோய்.
இது கால்நடைகள் , பறவைகள் ,விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் தாக்கக் கூடியது. H5N 1 வகை தொற்று பறவைகளைத் தாக்க கூடிய கொடியவகை வைரஸ் ஆகும்.
உலக சுகாதார மையத்தால் 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட H 5N 1 வைரஸ் மனிதர்களை எளிதில் தாக்கும் வைரஸ் ஆகும்.
முதலில் கோழிகளுக்கு வரும் இந்த நோய் பிறகு மற்ற பிராணிகளுக்கு பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கோழியின் மலம், நாசி சுரப்பு மற்றும் வாய் அல்லது கண்களில் இருந்து சுரக்கும் நீர் மூலமாக நேரடியாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுகிறது.
நீண்ட நாள் வாழக் கூடிய இந்த H 5N 1 வைரஸ் அடுத்தவருக்கு எளிதில் பரவக் கூடியது. இருமல், வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சனை, மூச்சு திணறல், நாட்பட்ட காய்ச்சல்,தொடர் தலைவலி தசைகளில் வலி, திடீரென்று உடல்சோர்வு, விடாமல் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி ஆகியவையே பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென் பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுக்க, தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.