குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற்றது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வது மக்களவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மூன்றாவது முறையாக மோடியே பிரதமராவார் என்று எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பெரும்பாலான மக்களிடையே எழுந்திருக்கும் நிலையில், 2024 மக்களவை தேர்தலில் முதல் வெற்றியை பாஜக கைப்பற்றி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் வரும் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு குஜராத்தில் முதல் வெற்றி போட்டி இன்றி கிடைத்திருப்பது அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
சூரத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பனி தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தாக்கல் நிராகரிக்கப் பட்டதால் , பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
‘ பாஜகவின் விருப்பத்தின் பெயரிலேயே காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளது . இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்’ என குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சகதிசிங் கோஹில் தெரிவித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டது என்பது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் ஒருவேளை தமது வேட்பு மனு நிராகரிக்கப் பட்டால் என்ன செய்வது என யோசித்த காங்கிரஸ் வேட்பாளர் தமக்குப் பதிலாக சுரேஷ் பத்சலா என்பவரையும் போட்டியிட வைத்துள்ளார்.
இதே தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பியாரேலால் பாரதி மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்புமனுக்களிலும் போலியாக கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும், பிரமாண பத்திரத்தில் உண்மைத் தன்மை இல்லை என்ற காரணங்களால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பனி மற்றும் அவரே போட்டியிட சொன்ன சுரேஷ் பத்சலா ஆகியோரின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ரத்து செய்தார்.
அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட மற்ற 8 வேட்பாளர்களும் ஒரே நாளில் தங்கள் வேட்பு மனுவைத் திரும்ப பெற்றனர்.
இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிட்ட முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றிப் பெற்றிருக்கிறார். இது குறித்து முறையான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலை வாழ்த்தி குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு சூரத் முதல் தாமரையை வழங்கி உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.
முகேஷ் தலாலின் இந்த வெற்றி மூலம் இந்த மக்களவை தேர்தலில் முதலில் தேர்வு செய்யப்பட்ட எம்பி என்ற பெருமையை பெற உள்ளார்.