மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இதற்காக நேற்று முன்தினம் மாலை கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார். கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல், வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
இதனையடுத்து நேற்று அதிகாலையில் மூன்றுமாவடிக்கு வருகை தந்த கள்ளழகரை மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். அப்போது இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் உற்சாகத்துடன் தண்ணீரை பீய்ச்சியடிக்க, அனைவரும் கோவிந்தா கோவிந்தா எனும் விண்ணை முட்டும் கோஷத்துடன் கள்ளழகரை வழிபட்டனர்.
மேலும், இந்த வருடம் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கியதால் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.