தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் பயிற்சி வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி ராஜூ நகரில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாம்பு கார்த்திக் என்பவர், சிறுவன் ஒருவனை ரேஷன் அரிசியை வாங்கித் தருமாறு கூறி கட்டாயப்படுத்தி அடித்துள்ளார்.
இது தொடர்பாக அதேபகுதியைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர் மாரிசெல்வம் மற்றும் பாம்பு கார்த்திக் ஆகிய இருவருக்கிமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகாலையில் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்டோர் கதவை தட்டியுள்ளனர்.
அப்போது கதவை திறந்தபோது, பாம்பு கார்த்திக் தலைமையிலான கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.