மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக தஞ்சை, திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களிடம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மணல் குவாரி உரிமையாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்கள்,மணல் குவாரிகள் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை சோதனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, முறைகேடுகள் நடந்ததாக கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப், அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா, கரூர் ஆட்சியர் தங்கவேல், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
இவர்களிடம் செயற்கை கோள் மூலம் பெறப்பட்ட புகைப்படங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடைபெற்றதோடு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்கள் அளித்த விவரங்கள் வீடியோவிலும், பதிவு செய்யப்பட்டுள்ளன.