பாஜகவில் இணைந்தால் வழக்குகள் கைவிடப்படுவதாக வெளியான குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பிரதமரிடம், விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், பாஜகவில் இணைந்தால் வழக்குகள் கைவிடப்படுவதாகவும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பாஜகவில் இணைந்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்த பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்களின் மீது 3 சதவீத வழக்குகளே உள்ளதாகவும், அதில் ஒரு வழக்கு கூட கைவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் அவர் கூறினார். ஊழல் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிலர் கைகளை அசைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வதாகவும், ஊழலை சாதாரணமாக கருதக்கூடாது என்றும் அவர் கூறினார்.
ஊழல் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.