கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விபரங்களை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 2018-ம் ஆண்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சிப்பதாக பரபரப்பு புகார் எழுந்தது.
அப்போது மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசுவது போல தொலைபேசி உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் மற்றொரு பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தீவிரமானதால் சிபிசிஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவுபெற்றது.
இதையடுத்து நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் நீதிபதி பகவதி அம்மாள், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகவும், முக்கிய குற்றவாளியாக நிர்மலாதேவி அறிவிக்கப்படுகிறார் எனவும் தீர்ப்பினை வழங்கினார்.
அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு அறிவிக்கப்படவுள்ளன.