நவகிரகங்களில் முதன்மையான சுப கிரகம் குரு தான். ஆண்டுக்கு ஒருமுறை குருபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால், அதிகளவில் நன்மைகள் கிடைக்க, நாம் செல்ல வேண்டிய குரு பரிகாரக் கோயில்கள் என்னென்ன? அவை எங்கெங்கே உள்ளன ? என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
குரு ஸ்தலம் என்றாலே அது திருச்செந்தூர் தான். முருகப் பெருமானே சிவபெருமான் . சிவபெருமானே முருகப் பெருமான். சிவபெருமானை பூஜிக்கும் நிலையில் கையில் தாமரை மலருடன் திருச்செந்தூரில் காட்சி அளிக்கும் செந்தூர் நாதனை வழிபட்டால் குருவினால் நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.
தஞ்சை மாவட்டத்தில் ,கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி.
இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் அருள் புரிகிறார். ஸ்ரீ ஆதிசங்கரர் குருபகவானிடம் மகாவாக்கிய உபதேசமும், 64 கலைகள் பற்றிய ஞானமும் பெற்றதாக வரலாறு. இந்த கோயிலில் அருளும் குரு பகவானை மஞ்சள் நிற ஆடை அணிவித்து, முல்லை மலர்களால் வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.
108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். ஆழ்வார் திருநகரி நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய தலமாகும். இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தனது குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். மேலும் நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வழிபடுவது சிறப்பு.
அகரம் கோவிந்தவாடி திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் இந்த குருபகவானை தரிசிப்பது நலம் என்கிறார்கள்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே தக்கோலம் -திருத்தலம் முக்கியமானது. இங்கே தக்ஷணா மூர்த்தி வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவடிவில் அருள் புரிகிறார் குரு பகவான்.
கும்பகோணத்தில், மகா மகக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள இறைவனை வழிபட்டு குரு வரம் பெற்றதால் , தம்மை வழிபடும் பக்தர்களுக்கு நல்லதே செய்வார் என்கிறது தலபுராணம்
மயிலாடுதுறையில் உள்ள வள்ளல் கோயிலில் திகழும் மேதா தக்ஷணா மூர்த்தியை வழிபடுவதும் சிறப்பானதாகும். மயிலாடுதுறையில் உள்ள மாயூர நாதர் திருக்கோயிலில் உள்ள தக்ஷணா மூர்த்தியை வழிபடுவதும் சிறப்பானதாகும்.
தென்குடித் திட்டை கோவில். இத்தலத்தில் குருபகவானுக்காகத் தனிச் சன்னிதி இருப்பது தனிச் சிறப்பு. கருவறையில் சுவாமிக்கு மேல் சந்திரக்காந்த கல்அமைக்கப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. இங்கே இறைவனை வழிபாடு செய்து கிரகங்களில் குரு தன் பதவியைப் பெற்றார் என்பது புராணம் சொல்லும் செய்தி.
அடுத்து ஓமாம்புலியூர் சிதம்பரத்துக்கு அருகில் இருக்கிறது இந்த தலம். இறைவன் தட்சிணாமூர்த்தியாக பார்வதி தேவிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த தலம் என்பதால் இங்கு உயர்ந்த பீடத்தில் தட்சிணாமுர்த்தி காணப்படுகிறார். இந்த தலத்தில் வழிபட்டால் அறிவும் தெளிவும் கிடைக்கும் என்கிறார்கள்
ஆடுதுறை செல்லும் வழியில் இருக்கும் திருலோக்கி திருக்கோயில் இறைவனை குரு வழிபட்டு அருள் பெற்றார் என்பதால் இத்தலத்து குருபகவானை வழிபடுவது சிறப்பு.
திருத்துறைப்பூண்டியில் உள்ள தேவூர் தலத்து இறைவனுக்கு திருப்பெயரே தேவகுருநாதன் . எனவே இங்குள்ள இறைவனுக்கு தேவகுருநாதன் என்று பெயர். குருபகவான் வழிபட்ட இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சன்னிதி இருக்கிறது என்பது சிறப்பு.
மேனகையிடம் பெற்ற சாபம் நீங்க குருபகவான் வழிபட்ட தலம், சென்னையில் பாடியில் உள்ள திருவலிதாயம் ஆகும். இங்கே குரு தனி சன்னதியில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு.
மதுரையில், சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். இவரை வழிபட்டால் பூரண நலம் கிடைக்கும் என்கிறது தலபுராணம்.
கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் குருபகவான் அருளுகிறார். வியாழக்கிழமைகளில் நம் வீட்டுக்கு அருகே இருக்கும் கோயிலுக்குச் சென்று, வழிபடுவது குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, சுவாமிக்கு கடலை மாலை அணிவித்து கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்யமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
குரு பகவானுக்குரிய காயத்ரி மந்திரம் ,அருளாளர்களின் தோத்திரங்களைப் பாடி
வழிபட்டால், குருபகவான் எல்லா நன்மைகளையும் அருளுவார் எனபது வேத சாஸ்திரம்.