மயிலாடுதுறையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால், கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் நாள்தோறும் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வில்லியநல்லூர் பகுதியில் செல்லும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி அருகில் உள்ள வயல்வெளியில் பாய்ந்து ஓடுகிறது.
இதனால் உளுந்து போன்ற பயிறு வகைகளை சாகுபடிகூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், இதனை சரிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.