மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தா் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளாா்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட கிருஷ்ணன், பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் குமார் ஜானகிராமன் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.
இவர் பொறுப்பேற்ற பின்னர் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் சிக்கல்கள் எழுந்தன. இதனால் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே துணைவேந்தர் குமார் ஜானகிராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்டட்டு அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
நிதி நெருக்கடி மிகுந்த சூழலில் உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்டு வரும் இவர், ஆளுநா் ஆர்.என்.ரவியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினாா்.
இன்னும் 11 மாத பணிக்காலம் உள்ள சூழலில், அவரது இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.