கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொராண்டோவில் பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள்’ எழுப்பப்பட்டது தொடர்பாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா நாட்டு துணை தூதரை நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.
அண்மையில் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் நடைபெற்ற சீக்கியர் தின விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் பிரிவினை வாதத்தை , தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான பதாகைகள் ஏந்திய படி பலர் கலந்து கொண்டனர்.
‘ நிஜ்ஜாரைக் கொன்ற கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் படங்களையம் தூக்கிப் பிடித்தபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான Sikhs for Justice என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த Sikhs for Justice அமைப்பினர் தான், கடந்த ஆண்டு கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவகத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் இந்திய தூதரக அதிகாரிகளை கடுமையாக தாக்கினார்கள்.
கல்சா தினம் எனப்படும் இந்த சீக்கிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் வாழும் சீக்கியர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க துணைநிற்பதாக உறுதி அளித்தார்.
நிஜ்ஜாரைக் கொன்றது இந்தியாவின் உளவுத்துறை தான் என்ற உண்மையை கனடா புலனாய்வு துறை தான் வெளிக்கொண்டு வந்தது என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
மீண்டும் ஒரு முறை நேரடியாக பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டிய அவர், நிஜ்ஜாரின் கொலையின் பின்னணியில் இந்தியா என்பதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதே மேடையில் , காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதர் சஞ்சய் வர்மாவை தண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.
இது மட்டுமின்றி காலிஸ்தான் தனிநாடு தொடர்பான மூன்றாம் கட்ட பொது வாக்கெடுப்பு வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதிகள் கூட்டிய ஒரு பொது நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டிருப்பதோடு , அதில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் கோஷங்கள் எழுப்பப் பட்டிருப்பதை, இந்தியா உடனடியாக கண்டித்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா நாட்டு துணை தூதரை நேரில் வரவழைத்து அழைத்து கண்டித்துள்ளது. இதுதொடர்பாக தனது கவலையைத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் வெளிப்பாடுகள். இரு நாட்டு உறவுகளை பாதிக்கும், மேலும் இந்த மாதிரியான செயல்கள், கனடாவிலும் வன்முறை சூழலை உண்டாக்கும் ” என்று குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாதிகளை ஒடுக்க ட்ரூடோ அரசு தவறிவிட்டது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டு உண்மைதான் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில் இந்தியா -கனடா உறவின் எதிர்காலம் என்ன? இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு திரும்புமா என்ற கேள்விக்கு பதில் கனடா அரசின் நடவடிக்கைகளில்தான் இருக்கிறது.