போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தொழிற்சாலையில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.
பொன்னேரி தாலுகா, சோழவரம் தொகுதி, அலமாதி கிராமத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் தொழிற்சாலை இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016-ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில் மே 1 அன்று இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் பறிமுதல் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடன் குடிநீர் நிரப்பப்பட்ட 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1,782 பாட்டில்கள், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 11,616 பாட்டில்கள், 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 9,600 பாட்டில்கள், 300 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 10,465 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், போலியான ஐஎஸ்ஐ முத்திரை பொறிக்கப்பட்ட சுமார் 2,58,000 லேபிள்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநர் ஸ்ரீஜித் மோகன், துணை இயக்குநர் தினேஷ் ராஜகோபாலன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத் தலைவர் ஜி.பவானி தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்கு முதல் மீறலுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது ரூ.2 லட்சத்திற்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும். பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது ஒட்டப்படும் பொருட்களின் மதிப்பில் 10 மடங்கு வரை அபராதம் நீட்டிக்கப்படலாம்.
இது போன்ற விதி மீறல் தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியவந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.
அல்லது BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.