நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக நிறைய கோயில்கள் இருந்தாலும் ,
அவற்றுக்கெல்லாம் முதன்மையான கோயிலாக, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. இன்றைய கோயில் அறிவோம் செய்தி தொகுப்பில் ஆலங்குடி கோயிலை பற்றி பார்ப்போம்…
சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98வது தலமாக ஆலங்குடி கோயில் விளங்குகிறது.
கும்பகோணத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்ட இத்தலத்து சுவாமி ஆபத்சகாயேஸ்வரர். ஏலவார்குழலி என்ற திருப்பெயருடன் அம்மை அருள்பாலிக்கிறாள்.
பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்து தீர்த்தங்களாக உள்ளன. பாற்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்தமையால் சுவாமி ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று போற்றப்படுகிறார்.
தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இவ்வூருக்கும் ஆலங்குடி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எந்த தீங்கும் உண்டாவதில்லை என்கிறார்கள் . பாம்பு தீண்டியும் ,விஷப் பூச்சிகள் கடித்தும் இவ்வூரில் விஷத்தால் யாரும் இறந்ததில்லை என்பதே சான்றாக இருக்கிறது.
கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இங்கே தல விருட்சமாக பூளை செடியே விளங்குகிறது.
குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி திருக்கோவிலில் மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்தி விசேஷம் என்பதால் தட்சிணாமூர்த்தித் தலம் என்று கூறுகின்றனர்.
சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது இங்கே நடந்த அற்புத வரலாறு.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மகா குரு வாரத்தன்று , பஞ்சமுக தீபாராதனையும், மாசி மாத கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும் மற்றும் பிற விசேஷ நாட்களில் அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இங்குள்ள குரு பகவானை வழிபட்டால் மாங்கல்யம் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
ஆலங்குடி குரு ஸ்தலம் தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம்.
முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் பெறுவர்.
இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த தீமைகள் யாவும் நீங்கும் என்கிறது தலபுராணம்.