சமீப காலமாக தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளதுடன், இதனை கட்டுப்படுத்த காவல்துறையும் தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளது. இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்….
கடந்த மார்ச் 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அனுமதி இன்றி செயல்பட்ட இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 111 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த இறால் பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் தலைமறைவான நிலையில், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள முகையூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி வாங்கி வைந்திருந்த உணவை, எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி மதுபோதையில், சாந்தியை வாக்குச்சாவடி மையத்திலே வைத்து சரமாரி தாக்கியுள்ளார். இச்சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 23 அன்று, கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ கோகோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தோஹாவில் இருந்து இங்கு வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசிதா என்ற பயணியை சென்னை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆப்பிரிக்காவில் இருந்து போதைப்பொருளை கொண்டு வந்து டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தனது வீட்டின் அருகே தெரு முனையில் அமர்ந்திருந்தபோது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல், அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளது.
ஏப்ரல் 25ஆம் தேதி அன்று, சென்னை திருமுல்லைவாயலில் கஞ்சா போதையில் பொதுமக்கள் 12 பேரை சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணபதி நகர் பகுதியில் அபினேஷ், விஷ்ணு மற்றும் முத்து ஆகிய மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் பெண்களை ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகன் விஜயையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும் சாலையில் சென்றவர்கள், இருசக்கர வாகனத்ததில் வந்தவர்களுக்கும் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது.
அதே நாளில், சென்னை விமான நிலையத்தில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 35 கோடி ரூபாய் மதிப்பிலான 3.5 கிலோ போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் வந்த கம்போடிய பயணியின் உடமைகளை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது, கோகோயின் போதைப்பொருள் பார்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏப்ரல் 25 அன்று, சென்னை, சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஷர்மினா வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டிலிருந்த ஒரு கறுப்பு நிற பேக்கில் 1,300 கிலோ எடையுள்ள கஞ்சா வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், திருத்தணியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து போதை பொருட்களை வாங்கி, ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஷ்ர்மிளா மற்றும் சுரேஷை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே நாளில் சென்னை அடையாறில் சாலையோரம் போதைப்பொருள் உட்கொண்ட இரண்டு இளைஞர்கள் மயங்கிக் கிடந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்சில் அழைத்து செல்ல முற்பட்டபோது, போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஏப்ரல் 25ஆம் தேதி விருத்தாசலத்தில் இருந்து கடலூருக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் தற்காலிக பணியாளராக ஓட்டுநர் வசந்தகுமாரும், நடத்துநராக அருள்ராஜூம் பணியில் இருந்துள்ளனர்.
கடலுார் சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே சென்றபோது, இளைஞர் ஒருவர் சாலையின் குறுக்கே பேருந்தை வழிமறித்து நின்றார். அவரை ஒதுங்கி நிற்குமாறு கூறிய நடத்துநரை குடிபோதையில் இருந்த இளைஞர் சரமாரி தாக்கியுள்ளார். இதையடுத்து போதை நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே வி.ரெட்டியார்பட்டி கிராமத்தில் வசிக்கும் திமுகவை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி தமிழ் செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்ததாக சுபாஷ் சந்திர போஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற கஞ்சா போதை சம்பவங்களால், தமிழ்நாடு தள்ளாடும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காமல், கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுவதுடன், இது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் நாடா ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.