நாமக்கலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த நிலையில், அவர் சாப்பிட்ட உணவில் பூச்சி மருந்து கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த பகவதி என்பவர், பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
ஒரு பார்சலை தேவராயபுரத்தில் வசிக்கும் தாத்தா சண்முகநாதனுக்கு கொடுத்த நிலையில், அதில் பாதியை பகவதியின் தாய் நதியா சாப்பிட்டுள்ளார்.
அதிலிருந்து வித்தியாசமான வாசனை வந்ததை அடுத்து அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தன் தந்தைக்கு போன் செய்து விசாரித்துள்ளார்.
ஆனால், அதற்குள் சண்முகநாதன் முழு உணவையும் சாப்பிட்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்திலேயே நதியாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், சண்முக நாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், உணவில் பூச்சி மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.
பகவதியின் காதல் விவகாரத்தை தாய் மற்றும் குடும்பத்தினர் கண்டித்ததால், அவர் உணவில் விஷம் கலந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பகவதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.