கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது தொகுதியாக உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கான பின்னணி என்ன?
அமேதியா ? ரேபரேலியா ? எங்கே ராகுல் போட்டியிடுவார் ? பிரியங்காவா ? ராபர்ட் வதேராவா ? யாருக்கு எந்த தொகுதி ? இது தான் கடந்த சில வாரங்களில் அரசியலில் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்த முறை தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்ததில் இருந்தே ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும், இல்லையென்றால் அவரின் கணவர் போட்டியிடலாம் எனவும் பேசப்பட்டது. இந்திராவின் அத்தை ஷீலா கவுலின் பேரன் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது.
இப்படி கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தரப்பட்ட யூகங்கள் பரவி வந்த நிலையில் இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த காங்கிரஸ் ஒரு வழியாக கடைசி நேரத்தில் வேட்பாளர்களை அறிவித்தது.
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ரேபரேலி தொகுதியில் 2004ம் ஆண்டு முதல் 2024 வரை தொடர்ந்து வெற்றி பெற்ற சோனியா காந்தி, இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் ,ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அப்போதே தோல்வி பயத்தால் தேர்தலில் சோனியாகாந்தி நிற்கவில்லை என்று கூறப்பட்டது.
நாட்டில் நடந்த முதல் இரண்டு மக்களவை தேர்தல்களில் நேருவின் மருமகன் பெரோஸ்
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு 1967, 1971, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இந்திரா காந்தி இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதில் 1980ம் ஆண்டில் இந்திரா காந்தி ரேபரேலி மற்றும் ஆந்திராவின் மேடக் தொகுதியில் போட்டியிட்டு , தேர்தல் முடிந்ததும் ரேபரேலி தொகுதியை ராஜினாமா செய்தார் . ரேபரேலியில் நடந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தியின் வலது கரமான அருண் நேரு போட்டியிட்டு வென்றார்.
1989 மற்றும் 1991 ஆகிய தேர்தல்களில் இந்திரா காந்தியின் அத்தையான ஷீலா கவுல் போட்டியிட்டு வென்றார். 1999 ஆம் ஆண்டு சதீஷ் சர்மா போட்டியிட்டு வென்றார். சதீஷ் சர்மாவுக்கு பின் இந்த ரேபரேலி தொகுதி சோனியா வசம் வந்தது.
சோனியா காந்தி தேர்தல் அரசியலுக்கு 1999 ஆண்டு வந்தபோது முதலில் ராஜீவ்காந்தி நின்று ஜெயித்த அமேதியைத் தான் தேர்ந்தெடுத்தார். அதன் பின் ராகுலுக்கு 2004 ஆம் அமேதியைக் கொடுத்து விட்டு ரேபரேலி தொகுதிக்கு மாறினார்.
2004ம் ஆண்டில் இருந்தே ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் காங்கிரஸ் தன் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது.
2014 ஆம் ஆண்டு பாஜக சார்பில் அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற ஸ்மிருதி ராணி மீண்டும் 2019ம் ஆண்டு அதே தொகுதியில் களமிறங்கி , ராகுலை 50,000 க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் .
காங்கிரஸ் முதல் குடும்பத்தின் கோட்டை எனக் கூறப்பட்ட அமேதி 2019 ஆம் ஆண்டு தகர்க்கப் பட்டது. இந்த தோல்வியை முன்கூட்டியே அறிந்த ராகுல், பாதுகாப்பாக ,இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
2024ம் ஆண்டு தேர்தல் களம் வேறு விதமாக அமைந்து விட்டது. கேரளாவின் வயநாட்டில் , ராகுலுக்கு எதிராக ஆனி ராஜா போட்டியிடுவார் என எதிர்பார்க்கவே இல்லை ராகுல்.
கடந்த மாதம் வயநாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, ராகுல் வயநாட்டில் தோற்று ஓடுவார் என்றும், இப்போதே வேறு தொகுதி தேடுவார் என்றும் அதிரடியாக பேசியிருந்தார். தேர்தல் முடிந்ததும் ராகுல் எங்கே நிற்க வேண்டும் என்பதை பாஜக சொல்லும் என்றும் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி பேசியது போலவே ,ராகுல் ஸ்மிருதி ராணிக்கு பயந்து , அமேதிக்கு செல்லாமல் ரேபரேலி தொகுதிக்கு சென்றிருக்கிறார். ரேபரேலி தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை, ராகுல் எப்படி எதிர்கொள்ளவுள்ளார்.
ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் சமாஜ் வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதி பாஜக வசம் உள்ளது.
இந்த தொகுதிகளில் 4 சதவீத வாக்குகளே காங்கிரஸிடம் உள்ளது.
ராகுல் தாம் நிற்கும் இரண்டு தொகுதிகளும் தோற்கப்போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.