அகால மரணம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் பெண்களுக்கா ? ஆண்களுக்கா ? ஒரு அதிர்ச்சியான பட்டிமன்றத் தலைப்பு போல ஒரு ஆரோக்கிய ஆய்வறிக்கையை லான்செட் பப்ளிக் ஹெல்த் என்னும் இதழ் வெளியிட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களின் சுகாதாரம் பற்றி அந்த ஆய்வறிக்கை என்ன சொல்கிறது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
லான்செட் பப்ளிக் ஹெல்த் என்ற பொது சுகாதார ஆய்வு இதழ், தனது ஆய்வு அறிக்கைகள் மூலம், உலக அளவில் பெரும்பாலான மருத்துவ அறிஞர்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் பொது சுகாதாரம் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அகால மரணம் ஏற்படும் வாய்ப்புகள் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே நேரம், நீண்ட ஆயுள் இருந்தாலும் கூட , பெண்கள் தங்கள் வாழ்வில் அதிக நாட்கள் உடல்நலப் பிரச்சனைகளுடனேயே வாழ்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதய பாதிப்பு ,நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு , மற்றும் கணைய பாதிப்பினால் எதிர்பாராத அகால மரணங்கள் கோவிட் காலங்களில் ஆண்களுக்கே அதிகம் ஏற்பட்டன. பெண்களை விட கோவிட் நோயினால் இறந்த ஆண்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகம் என்று புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த கோவிட் காலத்துக்குப் பிறகு தான் ,மக்களின் உடல்நலம் மனநலம் பெரிதாக பாதிக்கப்பட்டது. இறந்துவிட கூடாது என்ற மனக்கவலையின் காரணமாக பெண்களுக்கு முதுகுவலி, தலைவலி மற்றும், மனநல பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. அதுவே அவர்களின் மோசமான ஆரோக்கியத்துக்கு காரணமாகி, பெண்களின் வாழ்நாளை அதிக சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.
பெண்களுக்கு ஏற்படும் இந்த ஆரோக்கிய குறைபாடுகள் அவர்களின் வயதுக்கேற்ப மாறுபடுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் ஏழு மண்டலங்களில், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் வருவதற்கான 20 முக்கிய காரணங்களை முன்வைத்து இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. 2021 ஆண்டுகளின் தரவுகளின்படி, கடந்த 30 ஆண்டுகளாக நோய் சுமை மற்றும் நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறாக இருக்கின்றன.
ஒரே நோய் தான் என்றாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சிகிச்சை பயன்தராது. இந்த விஷயத்தில் பெண்களும், ஆண்களும் எந்த வகையில் வேறுபடுகிறார்கள் என்பதுதான் இந்த ஆய்வின், முக்கிய அம்சமே.
கால மாறுபாடுகளினால் உலகின் ஒவ்வொரு பகுதிகளில் வாழும் மனிதர்கள் எப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல்நலத்தையும் நோயையும் வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள் ? இதை ஆய்வு செய்வதன் மூலம் நோய் வராமல் தடுக்கவும் , முறையாக தகுந்த சிகிச்சை அளிக்கவும் பயன் தரும்.
அதுமட்டுமல்லாமல், இந்த ஆய்வறிக்கை சரியான நேரத்தில் வந்திருக்கிறது என்றும், சரியான நடவடிக்கை எடுக்க வழி காட்டுகிறது என்றும் கூறும் ஆய்வறிஞர் லூயிசா, ஆண் பெண் பாலின வேறுபாடுகள் ஆரோக்கிய விளைவுகளை ஆழமாக பாதிக்கும் என்பதை கோவிட் -19 இறப்புக்கள் நமக்கு அப்பட்டமாக நினைவூட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.