அரக்கோணம் அருகே ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 தேதி கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 விஏஓக்கள் மினி வேனில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது கோவிந்தவாடி அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை வேன் கடக்க முயன்ற போது அரக்கோணம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர், ஒரு சிறுவன் மற்றும் 9 விஏஓக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 10க்கும் மேற்பட்ட விஏஓக்கள் பலத்த காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 2008-ம் ஆண்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரனை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போதுபாதிக்கப்பட்ட விஏஓக்களின் குடுங்களுக்கு 1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இதற்கான வட்டி மற்றும் வழக்குக்கான முழு செலவினங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்,
மேலும் இந்த தொகையினை தென்னக ரயில்வே மற்றும் விபத்துக்குள்ளான வேனின் காப்பீட்டு நிறுவனமும் சமமாக பிரித்து அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.