மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், இளம் சிறுவன் உயிரிழந்ததும், பலர் காயமுற்றதும் அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். சிறுவன் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைந்து நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
சமீபத்தில் ஏற்காட்டில் நடந்த விபத்தின் வேதனைச் சுவடுகள் மறைவதற்குள், மீண்டும் அது போன்ற விபத்து நடந்திருப்பது, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன், தங்கள் பயணங்களை பாதுகாப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.