பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது.
பிரபல சவுக்கு யூடியூப் சேனலின் தலைமை செயல் அதிகாரியான சவுக்கு சங்கர் அரசியல் கட்சி தலைவர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும் பல்வேறு ஊழல்களையும் அம்பலப்படுத்தி வருகிறார்.இணையத்தில் பிரபலமாக அறியப்பட்ட அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சவுக்கு சங்கர் இன்று காலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டார். காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவர் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் அவர் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.