என்ன தொழில் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் வரவேண்டும் . அந்த லாபமும் ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு வளர வேண்டும். இப்படி ஆசைப்படும் அத்தனை பேருக்கும் ஆசைகள் அத்தனையும் நிறைவேற ஒரு கோயில் இருக்கிறது என்று சொன்னால் அது எங்கே என்று தானே கேட்பீர்கள் ? அந்த அற்புதமான கோயில் பற்றி தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் இது ஸ்டார்ட் அப் காலம். புது புது தொழில்கள் வரத் தொடங்கியுள்ளன.
விரைவில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தி பெருக வேண்டும். அதற்கு இளைஞர்கள் சுய தொழிலில் வெற்றிகரமாக செயல்படவேண்டும்.
அதை தான் சுயசார்பு பாரதம் என பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அதோடு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் சுயதொழில் செய்ய விஸ்வகர்மா திட்டம் போன்ற பல திட்டங்களையும் தந்திருக்கிறார் .
செய்யும் தொழிலில் தொடர் வெற்றிக்களைக் குவிக்க செல்ல வேண்டிய ஒரு திருக்கோயில் இருக்கிறது . அது எந்த கோயில் என்று கேட்கிறீர்களா?
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள். ஊழி தோறும் பிறந்து படைக்கும் தொழிலை சிவபெருமான் ஆணை வழி செய்யும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள்.
‘அவனுக்கும் 5 தலைகள் எனக்கும் 5 தலைகள்’- எனவே சிவபெருமானுக்கு இணையானவன் நான் என்ற ஆணவம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது .பிரம்மாவின் ஆணவத்தை அழிக்க முடிவு செய்த சிவபெருமான் அவனின் ஒரு தலையைப் பூவைக் கிள்ளுவது போல் கிள்ளி எடுத்தான் .
ஆணவத்தால் ஆடினால் இதுதான் கதி என்பதைப் பிறருக்கு உணர்த்த, தான் கிள்ளிய பிரம்மாவின் கபாலத்தைத் தன் கையில் ஏந்திக் கொண்டான். எனவே கபாலீஸ்வரன் இவன் ஆனான். இவனிருக்கும் இடம் கபாலீஸ்வரம் ஆனது.
சிவபெருமானிடம், அம்பிகை உபதேசம் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மயில் ஒன்று தோகை விரித்து நடனமாட , அதன் அழகில் அம்பிகை மயங்கினாள். உபதேச நேரத்தில் சிவசிந்தனையிலிருந்து மாறு பட்டதால், விமோசனத்துக்காக அம்பிகை மயிலுருவில் புன்னை மரத்தடியில் சுவாமியை வழிபட்டு , இறைவன் அருள் பெற்றாள் .
மயில் உருவில் இறைவனை, இத்தலத்தில் பார்வதி பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை எனப்படுகிறது. வேதங்கள் இத்தலத்தில் இறைவனை வழிபட்ட காரணத்தால் வேதபுரி என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்றும் புகழப்படுகிறது .
ஐப்பசி மாதம் வரும் ஓணநாள் அன்று , ஸ்ரீ இராமபிரான் இங்கே இந்த தலத்தில் கபாலீஸ்வரருக்குப் பிரமோற்சவம் நடத்தி வழிபட்டிருக்கிறார். ஆனால் இப்போது பங்குனி மாதம் பிரமோற்சவம் நடக்கிறது . அந்த திருவிழாவின் போது நடக்கும் அறுபத்து மூவர் திருவீதியுலா மிகவும் சிறப்பு பெற்றது .
மேற்கு நோக்கி இருக்கும் இந்த கோயிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கில் அமைந்துள்ளது . ராஜ கோபுரம் வழி கோயிலின் உள்ள சென்றால் நேர் எதிரே நர்த்தன விநாயகர் இருக்கிறார்.
உண்ணாமுலை அம்மன் ,அண்ணாமலையார் , சுந்தரேஸ்வரர் மற்றும் நவகிரக சன்னதி தரிசனம் முடித்து வலமாக வந்தால் , சிங்காரவேலர் சன்னதி,பழனியாண்டவர் சன்னதி, வாயிலார் நாயனார் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதி, அங்கம் பூம்பாவை சன்னதிகள் அமைந்துள்ளன .
கொடிமரம் அருகே பலிபீடமும் அதற்கு முன்னால் நந்திஎம்பெருமான் சுவாமியைப் பார்த்த படி இருக்கிறார். சுவாமியின் கருவறை பிரகாரத்தில் நடராஜர் , முருகன்,செல்வா விநாயகர்,தக்ஷணா மூர்த்தி சோமாஸ்கந்தர் சன்னதிகள் உள்ளன .
வடக்கு நோக்கி நின்ற நிலையில் தேடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள் அன்னை கற்பகாம்பாள்.வெளிப்பிரகாரத்தில் கோசாலைக்கு முன் புன்னை மரமும் , புன்னை மரத்தடியில் அம்பிகை மயிலாக சுவாமியை வழிபடும் ஆதிக் கபாலி கோயில் திகழ்கிறது .
இந்த திருக்கோயின் தீர்த்தமான கபாலி தீர்த்தம், வாலி தீர்த்தம் ,கங்கை தீர்த்தம் ,ராமன் தீர்த்தம் ,சுக்கிரன் தீர்த்தம்,வேத தீர்த்தம் ,கடவுள் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது .
இங்கே வந்து கபாலீஸ்வரரை வழிபட்டால் ,எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் வராது .அந்த தொழில் மேலும் மேலும் விருத்தி அடையும் என்றும், இன்றும் இதற்கான சான்றுகள் பல இருக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.
தொழில் மட்டும் இல்லை எந்த துறை என்றாலும் அந்த துறையில் உச்ச பதவியை அடைய வேண்டுமா ? அதற்கும் ஒரே பரிகார கோயில் இந்த கபாலி கோயில் தான்.