கோத்தகிரி அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, பவானி சாகர் அணை காட்சி முனை பகுதியில், சுற்றுலா சென்ற பேருந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 4-வயது சிறுவன் மரணித்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. மேலும், அப்பேருந்தில் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் வேதனை அளிக்கிறது.
கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால், மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆகையால், நமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் விதமாக கவனமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் நம்மிடத்தில் உள்ளது.
காயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் குணமடையவும், மரணமடைந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துக் கொள்வதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.