நெல்லை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட கிழக்கு தலைவராக பதவி வகித்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 3 தினங்களாக காணவில்லை என கூறப்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங்கை. தோட்டத்தின் அருகே உடல் பாதி எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர். இதனிடையே, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி கடிதம் ஒன்றை ஜெயக்குமார் தனசிங் அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனக்கு பல்வேறு காரியங்களை செய்து தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் எனவும் தேர்தலின்போது, 11 லட்சம் செலவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரூபி மனோகரன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.