நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் உயிரிழப்புக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாகவும், அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர் என குறிப்பிட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமி, இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கறையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது என விமர்சித்துள்ளார்.
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்வதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறும் முதலமைச்சர் ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.