தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டண்ட் அப் காமெடியில் உங்களுக்கு யாரை பிடிக்கும் ? என யாரிடம் கேட்டாலும் சட்டென்று வரும் பதில் கபில் சர்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்று கோடீஸ்வரராக திகழ்கிறார். இந்திய நகைச்சுவை நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் கபில் சர்மா பற்றியான ஒரு சுவாரஸ்யமான செய்தி தொகுப்பு.
ஸ்டண்ட் அப் காமெடியில் உங்களுக்கு யாரை பிடிக்கும் ? என யாரைக் கேட்டாலும் சட்டென்று வரும் பதில் கபில் சர்மா.
இந்தியாவின் டிவி ரசிகர்கள் எல்லோரும் கபில் சர்மாவை அவர்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கிறார்கள்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த 500 ரூபாய் சம்பளத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கிய,
கபில் சர்மா, இன்று 300 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகளுக்குச் சொந்தக்காரராக திகழ்கிறார்.
மிகப் பிரபலமான இந்திய நகைச்சுவை நடிகர், பாடகர், மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான கபில் ஷர்மா, பொழுதுபோக்குத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில், கபில் ஷர்மாவின் நிகர மதிப்பு, இந்திய பண மதிப்பில் சுமார் 300 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
அண்மையில் பொழுதுபோக்கு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஊதியமாக கபில் சர்மாவிற்கு ஒரு எபிசோடிற்கு 5 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தொகுப்பாளர்களில் அதிக ஊதியம் பெறுபவராக உயர்ந்திருக்கிறார்.
புகழ்பெற்ற இந்தி திரைப்படப் பிரபலங்கள் வசிக்கும் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கபில் சர்மாவிற்கு 15 மதிப்பிலான வீடு, பஞ்சாபில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடு, விலையுர்ந்த கார்கள், 5 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள அதிநவீன ஆடம்பர volvo vanity van என சொத்து பட்டியல் நீள்கிறது.
’காமெடி நைட்ஸ் வித் கபில் ‘ என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான கபில் சர்மா, அதைத் தொடர்ந்து ‘தி கபில் ஷர்மா ஷோ’, மூலம் மிகப் பெரிய வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸ் நகரத்தில்,ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கபில் சர்மா பிறந்த நேரத்தில் அவரது , குடும்பம் நிதி நெருக்கடிகளால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.
2004 ஆம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பிறகு, குடும்பத்தின் பணத்தேவைகளை சமாளிக்க கபில் சர்மா, சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
இயல்பாகவே நகைசுவை திறமை கொண்ட கபில் சர்மா வாய்ப்பு தேடி சென்ற இடங்களில் எல்லாம் நிராகரிக்கப்பட்டு வந்தார்.
பாடகராக வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததாகவும் , ஆனால் விதி தன்னை வேறு பாதைக்கு இழுத்துச் சென்றதாகவும் கபில் சர்மா தெரிவித்திருக்கிறார்.
கபில் சர்மாவின் முதல் ஷோ ‘தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச்’ வெற்றி பெற்றது. அவரது விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்தது.
தொடர்ந்து, கபில் ‘காமெடி சர்க்கஸ்’ போன்ற பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற கபில் சர்மா, 2013ஆம் ஆண்டில் ‘காமெடி நைட்ஸ் வித் கபில்’ நிகழ்ச்சியில் தோன்றினார். இந்த ஷோ அவருக்கு நாடு தழுவிய பெரும் அங்கீகாரத்தைக் கொடுத்தது.
அதே ஆண்டில், ( Forbes ) ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் முதல் 100 பிரபலங்கள் பட்டியலில் கபில் சர்மா, இடம் பிடித்தார். IBN இந்தியன் ஆஃப் தி இயர் விருதுகளில் சிறந்த பொழுதுபோக்கு பிரிவுக்கான விருதை கபில் சர்மாவுக்கு கொடுத்து கவுரவித்தது.
2014 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக கபில் சர்மாவும் அறிவிக்கப் பட்டார்.
இந்தி நடிகர் ஷாருக்கான் பங்கேற்புடன் தொடங்கப்பட்ட ‘தி கபில் ஷர்மா ஷோ’ மூலம் அவரது வாழ்வில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. நகைச்சுவை என்றால் கபில் என்ற இடம் கபில் சர்மாவுக்கு நிரந்தரம் ஆனது.
கபில் சர்மா நிகழ்ச்சியில் தங்கள் படங்களை விளம்பரப்படுத்த இந்தி திரையுலக பிரபலங்கள் போட்டிபோட்டுக் கொண்டு வரிசையில் நின்றனர்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விளம்பரப்படுத்த கபில் ஷோ வுக்கு வந்த ஷாருக்கான், தொடர்ந்து பலமுறை கபில் ஷோ வுக்கு வந்திருக்கிறார்.
ஜாக்கிசான், பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் உட்பட பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களும் இந்த கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டு அலங்கரித்தனர்.
ஸ்டாண்ட் அப் காமெடியில் , விரைவான புத்திசாலித்தனத்திற்கு அப்பால், தன் ரசிகர்களின் கவலைகளை மறக்க வைத்து, சிரிக்க வைக்கும் கபில் சர்மாவின் பாதை குறிப்பிடத்தக்க சாதனைகளால் மட்டுமல்ல செழிப்பான செல்வ வளத்துடனும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கபில் சர்மா வாழ்க்கை, வெற்றிக்கு மட்டும் இடம் தரவில்லை. சர்ச்சைகள், போராட்டங்கள், மனஅழுத்தங்கள், என ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற நிலையும் கபில் சர்மாவின் பாதையில் இருக்கிறது என அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவரான கபில் சர்மாவின் வாழ்ககை, சின்னத்திரையில் ஜெயிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் தரும் என்பதில் ஐயமில்லை.