இந்தியர்களின் நிறம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமது பதவியை ராஜினமா செய்துள்ளார். சாம் பிட்ரோடா மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா, “இந்தியாவில் தெற்கே இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும், கிழக்கில் வாழ்பவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் இருப்பவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கே உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும் இருக்கிறார்கள்” என்று, இனவெறி கருத்துக்களைச் சொல்லி இருந்தார். இந்த கருத்து தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது .
தோலின் நிறத்தை வைத்து சொல்லும் இனவெறிக் கருத்துக்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், இப்படி அவமரியாதை செய்வதை ஒரு போதும் நாடு சகித்துக் கொள்ளாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .
தெலங்கானாவில் கரீம் நகரில் நடந்த பிரம்மாண்டத் தேர்தல் பிரச்சாரச் சிறப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் என்று சாம் பிட்ரோடா கூறுகிறார் என்றும் தென்னிந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
தமிழர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சொல்லும் காங்கிரஸ் உடனான கூட்டணியைச் சுயமரியாதை உள்ள திமுக முறித்துக் கொள்ளுமா ? என்று கேட்ட பிரதமர் மோடி, அந்த துணிச்சல் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்றும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகராகவும்,நண்பராகவும் இருக்கும் சாம் பிட்ரோடாவின் கருத்து கோபத்தை ஏற்படுத்துகிறது என்றும், இதற்குக் காங்கிரஸ் இளவரசர் பதில் அளிக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.
“இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றிய சாம் பிட்ரோடாவின் விளக்கம் துரதிருஷ்டவசமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தாலும், எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
தாம் ஒரு கருப்பு தோலுடைய பாரதீயன் என்பதில் பெருமைப்படுவதாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
“தாம் வடகிழக்கைச் சேர்ந்தவன் என்று கூறியுள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. தாம் இந்தியனாகத் தெரிவதாகவும், ஒவ்வொருவரும் ஒரு நிறத்தில் இருந்தாலும் எல்லோரும் இந்தியர்களே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவைப் பற்றி ஏதாவது புரிந்து கொள்ளுங்கள் என்றும் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிட்ரோடா ஒரு இனவெறியர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா, அவரது கருத்துக்கள் அவரது சார்புநிலையை பிரதிபலிக்கின்றன என்றும் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் வழிகாட்டியான இனவெறியர்களுக்கு, தாங்கள் அனைவரும் ஆப்பிரிக்கராகவும், சீனர்கள், அரேபியர்கள் மற்றும் வெள்ளையர்களாக தெரிவதாகவும் கூறியுள்ளார்.
‘ராகுலின் ஆலோசகரான சாம் பிட்ரோடாவுக்கு நாட்டைப் பற்றியோ அதன் கலாச்சாரத்தைப் பற்றியோ எந்த புரிதலும் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது’ என்று கூறியுள்ள பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி ஏன் இவ்வளவு முட்டாள்தனமாக பேசுகிறார் என்பதை இப்போதுதான் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துளளார்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் இந்த இனவெறி கருத்துக்கு சாம் பிட்ரோடாவை விட்டுவைக்கவில்லை.
“பிட்ரோடாவின் கூற்றில் தமக்கு உடன்பாடு இல்லை.இது துரதிர்ஷ்டவசமானது. தனது பிரச்சினைகளை நாட்டின் பிரச்சினையாக்க வேண்டும் என்பது தான் அவரின் கருத்தில் வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள சிவசேனா கட்சித் தலைவர் தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இவரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே பரம்பரை சொத்து வரி குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியர்களின் நிறம் பற்றிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தமது பதவியை ராஜினாமா செய்வதாக சாம் பிட்ரோடா அறிவித்துள்ளார்.