இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (CSIR), தனது ஊழியர்களுக்கு ஒரு வேடிக்கையான சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. திங்கட்கிழமைகளில் இனி, அயர்ன் செய்யப்படாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஏன் இந்த திடீர் அறிவிப்பு ? என்ன காரணம் ? என்பதை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு.
MNC போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வித்தியாசமான வேலை கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும். சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் ஊழியர்களுக்கு வேலை பளு தெரியாது என்பதற்காக , அடிக்கடி அலுவலக நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றங்களைச் செய்தபடியே இருப்பார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களில் தங்களுக்கு பிடித்தமான உடையணிந்து வரலாம் என்பார்கள்.
ஆனால் இந்திய நிறுவனமான CSIR சுற்றுச் சூழலுக்கு ஆதரவாக, திங்கள்கிழமைகளில் அயர்ன் செய்யப்படாத உடைகளை அணியுமாறு அதன் ஊழியர்களைக் ‘Wrinkles Acche Hai’ (WAH) என கேட்டுக் கொண்டுள்ளது.
மே 1 ஆம் தேதியில் இருந்து மே 15 ஆம் தேதி வரை CSIR நிறுவனத்தின், ‘ஸ்வச்சதா பக்வாடா’வின் ஒரு பகுதியாக ‘ரிங்கிள்ஸ் அச்சே ஹை’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அயர்ன் செய்வதற்கு முக்கிய தேவை மின்சாரம். இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் மின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் பணியிட மின்சார செலவினங்களை 10 சதவிகிதம் குறைப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்டதே ‘ஸ்வச்சதா பக்வாடா’ திட்டம் .
காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒரு அடையாளப் போராட்டம் தான் இது. நாட்டின் ஆற்றல் சேமிப்புக்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பதை ஊழியர்களிடம் கொண்டு செல்லவே இதை நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், சிஎஸ்ஐஆரின் முதல் பெண் இயக்குனருமான டாக்டர் கலைச்செல்வியின் முன் முயற்சிகளால் , CSIR நிறுவனத்தில் பல சுற்றுசூழல் பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்பட்டுள்ளதாக CSIR அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றலைப் பாதுகாப்பதற்கான சிஎஸ்ஐஆரின் முயற்சியின் ஒரு பகுதியாக ‘Wrinkles Acche Hai’ பிரச்சாரம் உள்ளது என்று கூறிய டாக்டர் கலைச்செல்வி, “ஒவ்வொரு செட் துணிகளையும் அயர்ன் செய்யும் போது ஏறத்தாழ, 200 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. எனவே, ஒவ்வொரு வாரமும் ஒரு நாளுக்கு அதைக் குறைப்பதே ‘Wrinkles Acche Hai’ பிரச்சாரத்தின் நோக்கமாகும்! என்றும் தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப களங்களில் ஆராய்ச்சிப் பணிகளில் செயல்படும் CSIR இந்தியாவின் முக்கிய R&D நிறுவனமாகும்.
37 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நிறுவனமே CSIR எனப்படும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாகும் .
இதில் 3521 விஞ்ஞானிகள், தொழில்நுட்ப மற்றும் துணைநிலை ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 8000 க்கும் ஊழியர்கள் பணிபுரியும் CSIR நிறுவனத்தின் இந்த முயற்சி மிக நல்ல தொடக்கமாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.
இந்தியாவின் மின்சார நுகர்வு பல மடங்கு கூடி வரும் நிலையில் , சுற்றுச் சூழல் பாதுகாப்பில் Wrinkles Acche Hai’ பிரச்சாரம் பெரிய மாற்றத்திற்கான ஒரு சிறிய தொடக்கமாக கருதலாம்.