காசாவின் மிகப்பெரிய நகரமான ரஃபாவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது இஸ்ரேல். ரஃபா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை, இந்தப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து பதிலுக்கு காசா மீது இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்தது.
இந்த போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் , இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக் கொண்டு வர எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இருதரப்பினருக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது.
கெய்ரோவில் ,பல சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் ,போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுதலைக்கான சமரச உடன்படிக்கை எட்டப்படவில்லை .
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டோம் என்று ஹமாஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் சொன்னதை , அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், மறுத்திருக்கிறார்.
பணயக்கைதிகள் ஒப்பந்த முன்மொழிவை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாகவும் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்ட மில்லர், ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை ஏற்காமல், அதற்கு பதிலாக ஹமாஸ் வேறு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே சென்ற திங்கள் கிழமை இஸ்ரேல் பிரதமரின் எக்ஸ் தளத்தில் ,”தங்கள் பணயக்கைதிகளை விடுவிப்பதையும் போரின் பிற இலக்குகளையும் மேம்படுத்துவதற்காக ஹமாஸ் மீது இராணுவ அழுத்தத்தை பிரயோகிக்க இஸ்ரேல் ரஃபாவில் நடவடிக்கையைத் தொடர்கிறது என்று போர் அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கு ரஃபாவில் உள்ள மக்களுக்கு இஸ்ரேலியப் படைகள் வான்வழியாக துண்டுப் பிரசுரங்களை வீசியது. பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தது .
கிழக்கு ரஃபாவில் உள்ள ரஃபா தீவிரவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரேல் உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து ராணுவம் நடவடிக்கையில் இறங்கியது
பாலஸ்தீனிய தீவிரவாதிகளான ஹமாஸின் கடைசி கோட்டையாகக் கருதப்படுகிறது ரஃபா.
தெற்கு நகரத்தில் மூத்த ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,000க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது .
எகிப்திலிருந்து பாலஸ்தீனத்துக்குள் செல்வதற்கான ஒரே வழியான ரஃபா எல்லை பகுதி, இப்போது இஸ்ரேல் கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
14 லட்சத்துக்கும் அதிகமானபுலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வசிக்கும் ரஃபாவின் மீது முழு அளவிலான தாக்குதல் அந்த மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
கான் யூனிஸ் மற்றும் காசா போன்ற முக்கிய நகரங்களை இடித்து தரைமட்டமாக்கி , காஸாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய இஸ்ரேல், ரஃபாவை போரின் மையமாக மாற்றி உள்ளது.
அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் ஹமாஸை அழிப்பதே தங்கள் இலக்கு என வெளிப்படையாக பலமுறை இஸ்ரேல் பிரதமர் கூறி வந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் தொடங்கி இருப்பது குறிப்பிடதக்கது.
ரஃபாவை முற்றிலும் இஸ்ரேல் இராணுவம் அழித்தபின் காசாவின் எதிர்காலம் என்னவாகும் ? என்ற கேள்விகளை இப்போதே உலக நாடுகள் எழுப்புகின்றன.
இருதரப்பும் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுதலை குறித்த உடன்படிக்கை இன்னும் முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டே செல்கிறது..
இஸ்ரேலும் ஹமாசும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்துவதால் போர் நிறுத்த பேச்சில் முடிவு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.