“வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
அதிக வெப்பம் மற்றும் ஒரு சில பிரச்சனைகளால், தென் சென்னை, விழுப்புரம், மதுரை, ஈரோடு மற்றும் ஊட்டி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில், தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பெருநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காண்காணிப்பாளர்கள், மாவட்ட அளவிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, வாக்கப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டன.
மேலும் “மின்சாரம் இல்லாத நேரங்களில் யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் முறையாக இயங்குகிறதா என்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்” என்றும் தலைமைத்தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.
“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், அதற்கான பயிற்சி, தடையில்லா மின்சாரம், மற்றும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்” எனவும், “அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டார்.