பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கே சொந்தமானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அமித்ஷா,
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால், அந்நாட்டை மதிக்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் கூறுகிறார்.
சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து பேசக் கூடாது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறினார் என்று அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கே சொந்தமானது என்று கூறிய அமித் ஷா, அப்பகுதியை இந்தியாவுடன் இணைப்பது குறித்து இந்தியா கூட்டணி பேசாமல், அணுகுண்டை வைத்து தேசத்தின் பாதுகாப்புக்கு காங்கிரஸ் அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கே சொந்தமானது என்பதை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா , அணுகுண்டை சுட்டிக்காட்டி பேசுவதன் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை எதிர்க்கட்சியினர் கேள்விக்குட்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவானது என்றும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒவ்வோர் அங்குல நிலப்பரப்பும் இந்தியாவுக்கே சொந்தம் என்றும் அமித் ஷா உறுதிப்பட தெரிவித்தார்.