c
TV , OTT , YOUTUBE போன்றவற்றில் ஒளிபரப்பாகும் குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை பார்க்கும் பள்ளி மாணவர்கள் எந்தவிதமான பாதிப்புக்கு ஆளாகின்றனர் ? என்பது பற்றி பார்ப்போம்.
சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள், தலைநகர் சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம், கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அந்த அறிக்கையில், OTT தளத்தில் துப்பறியும் கதை தொடரின் முதல் பகுதியைப் பார்த்த இளம் பள்ளி மாணவர்கள், குற்றப்பின்னணி உள்ள கதையால் ஈர்க்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட தொடருக்கு அடிமையாகின்றனர். அதன் விளைவாக மாணவர்கள் பெரும் அளவில் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிபிஎஸ்இ, தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் 2033 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 34 சதவீத மாணவர்கள் மனப்பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்த நிலையில், 33 சதவீத மாணவர்கள், க்ரைம் தொடர்களைப் பார்த்தபின் பயத்தால் நடுங்குவதாக கூறியுள்ளனர்.
கிராஃபிக் காட்சிகள், ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் வீசுவது போன்ற காட்சிகள்,மற்றும் குரூரமான சித்ரவதை காட்சிகள் என இருக்கும் தொடர்களைப் பார்த்தபிறகு, பயங்கரமான கனவுகள் வந்ததாக பல மாணவர்கள் ஆய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தினசரி 2 மணிநேரம், இந்த மாதிரி க்ரைம் தொடர்கள்-நிகழ்ச்சிகளை டிவியில், OTT யில் , YOUTUBE யில் பார்க்கும் பள்ளிக் குழந்தைகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு, அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுவதாக இந்த ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களில் ஒருவரான மாரியப்பன், ‘ சிறு குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன் வந்து விட்ட நிலையில் , வயது கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, மொபைல் போனில் குற்றச் சம்பவங்களை மிக எளிதாக குழந்தைகள் பார்க்கின்றனர் என்றும், பெற்றோரின் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தாலேயே இது நடக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
குற்றவாளிகளை ஹீரோவாக காட்டும் நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் , மாணவர்களைக் கவர்கின்றன என்று குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை, இந்த மாதிரியான குற்றவாளிகள் பற்றி பார்க்கும் மாணவர்களே எளிதில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கோடிட்டு காட்டியுள்ளது .
பெரும்பாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், டிவி யூ டியூப்பில் வரும் உள்ளடக்கத்துக்கு இன்னும் சென்சார் வரவில்லை என்றும். TRP யை கூட்டுவதற்காக, OTT தளத்தில் வரும் தொடர்களின் படைப்பாளிகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதீத கற்பனையில் கிராபிக்ஸ்காட்சிகள் மூலம் தத்ரூபமாக க்ரைம் காட்சிகளை வைப்பதால் தான் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ள ஆய்வறிக்கையைப் பார்க்கும் போது நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் நிலவுகிறது.