காங்கிரசின் அயலக பிரிவு முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியர்களின் நிறம் குறித்து பேசிய சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர்.
பிரதமர் மோடி தொடங்கி நாடு முழுவதும் மணிசங்கரின் கருத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்..!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான மணிசங்கர் ஐயர், பேட்டி ஒன்றில் பேசும் போது , ‘பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். ஏனென்றால் பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது’. என்று கூறியிருந்தார்.
மேலும் அவர், ‘பாகிஸ்தானை இந்தியா மதிக்கவில்லை , அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள்’ என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
மணிசங்கர் ஐயரின் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், ராகுல் காங்கிரசின் சித்தாந்தம் இந்த தேர்தலில் தெளிவாக தெரிகிறது.
தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி அமைப்பதும், யாசின் மாலிக் போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதும், ஊழல் செய்வதும், ஏழை மக்களை திசை திருப்ப பொய் பிரச்சாரங்கள் செய்வதும் இஸ்லாமியர்களைத் எப்படி வேண்டுமானாலும் திருப்திப்படுத்துவதும் தான் காங்கிரசின் கொள்கை என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மணி சங்கர் ஐயரின் இந்த கருத்துக்குப் பிரதமர் மோடி கடுமையான பதிலடி தந்திருக்கிறார்.
ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரச் சிறப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
‘காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தாய் நாட்டை அச்சுறுத்துகிறது. பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்குவது பற்றி பேசும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, அவர்களிடம் அணுகுண்டு இருக்கிறது என்று காங்கிரஸ் பேசுகிறது என்று குற்றம் சாட்டினார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பொக்ரான் அணு சோதனையை வெற்றிகரமாக நடத்தி, உலகம் எங்கும் இருக்கும் இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி அதே சமயம் காங்கிரஸ், ‘பாகிஸ்தான் ஒரு அணுசக்தி’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, இந்தியர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காத காங்கிரஸ் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி “தங்கள் வாக்கு வங்கியை சீர்குலைக்கும் பயத்தில்” மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து எந்த விசாரணையையும் காங்கிரஸ் அமைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிசங்கர் ஐயருக்குப் பதிலளித்திருக்கிறார்.
தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பாகிஸ்தானின் தோட்டாக்களுக்கு பீரங்கிகளால் பதில் அளிக்கப்படும் என்று ஆவேசமாக கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா ,அணுகுண்டு பயம் காரணமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் விரும்புவதாக, தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ஜார்க்கண்ட்டில் பேசிய அமித்ஷா, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச வேண்டாம், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது’ என்ற ஃபரூக் அப்துல்லாவுக்குப் பதிலாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது, அதை யாராலும் பறிக்க முடியாது, என்று உறுதிபடக் அமித் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தேர்தலில் பெரும் தோல்வி உறுதி என்பதால் காங்கிரஸ் திணறுகிறது என்ற உத்திரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ‘ உலகிலேயே மிகவும் திறமையான இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் ‘ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
வைரலாகும் தனது வீடியோ பற்றி விளக்கமளித்து, அறிக்கை வெளியிட்டுள்ள மணிசங்கர் ஐயர், பாஜகவின் பிரச்சாரம் ஈடுபடாததால் தனது பழைய வீடியோவை தோண்டியெடுத்து வெளியிட்டுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு வெளியிட்ட எனது தமது இரண்டு நூல்களில் சரியான தகவல்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை செய்தி தொடர்பாளர் பவன் கேரா, சில மாதங்களுக்கு முன் மணி சங்கர் ஐயர் தெரிவித்த கருத்துக்களில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்றும், பிரச்சாரத்தைத் திசைதிருப்பவே இது இப்போது பரப்பப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் தலைவர்களின் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களே காங்கிரசின் படு தோல்விக்கு காரணமாகலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.